இன்றுமுதல் இனிதே...

சிலப்பலக் காரணங்களுக்காக புது வலைத்தளம் தொடங்கி அங்க பதிவெழுதத் தொடங்கி இருக்கேன்..
இனி இங்கு இடுகைகள் இடப்படா.. :D இ.இ.இ.இ!
தொடர்ந்து என்னைத் தொடர வாங்க, தோகை.யின் வலைத்தளத்தில் தோகை.யின்/தூரல்

http://thogai.in/thooral

பி.கு.1 - Technical-ஆ "இன்றுமுதல் இனிதே" இல்ல, "நேற்றுமுதல் நன்றாக"!
பி.கு.2 - சிலப்பலக் காரணங்களை அப்புறமா நேரங்கெடைக்கறப்போ தோகை.யின்/தூரல்-ல தூரறேன்

கனவு பாதி நனவு பாதி

[கடவுள் பாதி, மிருகம் பாதி (அ) ரீல் பாதி, ரியல் பாதி - பத்தி தெரியாதவங்க, கூகிள் செய்து பாத்துட்டு படிங்க..]
இடம்:
கல்லூரி, ஆண்டுத் துறையிடை போட்டிகள், கல்லூரி இளையவருங்க நடத்தற போட்டிங்கள பாக்கப் போயிருந்தேன், போட்டிகள் இரண்டாவது நாள், காலை ஏழு மணி, முதல் நாள் அலுப்புல செம தூக்கம்..
பொருள்:
மௌன விளையாட்டு (டம்ப்ஸீ) போட்டி, செல்வி நடத்தப் போகிறார், செல்வி கொஞ்சம் துணிச்சலான இந்த காலத்துப் பெண்.. பாக்கப் போகணும்.. கூட ஒரு மனதளவு ஆதரவும் கொடுக்கப் போகணும்.. ஆனா தூக்கம் விட மாட்டேங்குது!
ஏவல்:
பதினோரு மணிக்கு எழுந்து, பன்னெண்டு மணிக்குப் போறப்ப கேக்க வர செல்விக்கு பதில் சொல்லணுமில்ல!!

காட்சி:
(நண்டு தூங்கறான், மணி அடிச்சி, அடிச்சி களைச்சி செல்பேசி பேட்டரி அவுட்!)
செண்டு: நண்ஜூ, யெய்ந்திரி டா.. ட்சைம் ஆச்சி.. புவர் கேள், அந்தப் பொண்ணு செல்விய யென்னா டார்ச்சர் பண்றாங்களோ! பொறுக்கிப் பசங்க..
வண்டு: டே செண்டு, சும்மார்ரா.. யாரு பாவம்? அந்தப் பொண்ணு வாயத் தொறந்துச்சுனா - எம்மா.., டீம்ஸ்-லாம் அப்பால போயி வுந்துருவாங்க..
செண்டு: ட்ஜேய் வண்டு, அந்தப் பொண்ணு யெவ்ளோ ஸ்மார்ட்-ஆ ரௌண்ட்ஸ்-லாம் செட் பண்ணியிர்கு தெர்ரியுமா, ட்ஜேய் நண்டு, யெய்ந்திரி டா.. யென்க்கு, டம்ப்ஸீ பாக்ணும்னு ஆஷையா யிர்க்குடா..
வண்டு: செண்டெ, மன்சனுக்கு எய்ட் ஹவர்ஸ் தூக்கம் மஸ்ட்-ஆன்டா.. (இப்ப வர்ற படங்களலாம் பாத்தா, எய்ட் டேஸ்-க்கு கண்ணு அவிஞ்சி போயிடுது, இதுல எய்ட் ஹவர்ஸ் எங்க தூங்கறது?!)
செண்டு: ட்ஜேய் வண்ஜூ,தெரியுமாடா - யெட்டு மண்நேரத்துல, நம்ம இளையராஜா சார் யில்ல, ஒரு ஃபுல் படத்துக்கே ம்யூசிக் போட்ருவாரான்டா, ஓ மை காட், ஈ இஸ் சச் எ ட்ரூ ஜீனியஸ் டா!
வண்டு: அப்டீனு பாத்தா, செண்டு.. நம்ம ஊரு மியூசிக் டைரக்டர் ஒருத்தரு, அவரு போட்ற லாலாலா போட, ஒரு படத்துக்கு எய்ட் வீக்ஸ் ஆகுமான்டா.. (எய்ட் வீக்ஸ், என்னா, எய்ட் மன்த்ஸ் போட்டாக் கூட இப்டித்தான் போடுவாரு, எப்பா, அப்றம் அதுக்கு நீதான் டா டேன்ஸ் ஆடணும்,,)
செண்டு: தூ, பொறுக்கிப் பையா, ட்ஜேய் நண்டு, யெயிந்திரிடா, யிரு.. யிரு, யின்னும் கொஞ்ச நேரத்துல, கால் மேல கால் வந்து ஒன் தூக்கத்த கெடுக்கப் போகுது.. அப்றம் நீயே யெந்திரிக்கப் போற..
வண்டு: டே செண்டு, அதான் மொபைல் ஆஃப் ஆயிடுச்சில்ல, எப்பிட்றா கால் பண்ணுவாங்க..? (இப்ப சில டைரக்டருங்க எழுதுற டயலாக்லாம் கேட்டா நம்ம காதே ஆஃப் ஆயிடுது..)
செண்டு: நீ சொல்றது ர்ரொம்ப கர்ரெக்ட் டா நண்டு, ஆனா, மதன் சார் மாதிரி ஆளுங்க யெயிதற டயலாக்லாம் கேட்டா, ஆஃப் ஆயிருக்கற காதே ஆன் ஆயிடும் டா..
நண்டு (கொஞ்சம் தூக்கம் களைஞ்சு): டே செண்டு, என்னாங்கடா, ரீல் பாதி, ரியல் பாதில வர்ற மாதிரி, சும்மா தொணதொணனு பேசிக்குனே இர்க்கீங்க, சும்மார்ருங்கடா, தூங்கணும்.. வண்டு, வாய மூட்றாப்பா, எல்லாத்தையும் கலாய்க்கறான்..
(நண்டு தொடர்ந்து தூங்கறான்..)

தொரட்டிக் கண்ணு கருவாச்சியே!

கொஞ்ச நாள் முன்ன, முழுவரிசை-ல போட்டிருந்த பருத்திவீரன் படப்பாடல்-ல சினேகன் எழுதன ஒரு வரி:
"தொரட்டிக் கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. "

இதுல, தொரட்டி/துரட்டி-ங்கற வார்த்தை கேள்வியே பட்டதில்லையே-னு சிந்திச்சா, இடம் பொருள் வச்சி அது அருவா போல ஒரு ஆயுதம்-னு பட்டுச்சு, சரி, மேல ஆராய்வோம்னு, "தமிழ் தெரிஞ்ச" நண்பர் ஒருவர்கிட்ட கேட்டேன்..

நான்: 'தொரட்டிக் கண்ணு கருவாச்சி' - தொரட்டி/துரட்டி - ஆயுதமா இருக்கலாம், என்ன-னு தெரியுமா?

நண்பர்: ஹ்ம்ம்ம்,, நானும் அருவா மாதிரி தான்-னு நெனைக்கறேன்.. தெரியல.. பாத்து சொல்றேன்..

அடுத்த நாள்-
நண்பர்: உண்மையிலேயே அழகானதொரு உவமை.. கண்ணுக்கு..! அந்த ஆயுதம் வேறெதும் இல்லை..
அலக்கு.. tamil lexicon ல பார்த்தேன்..

நான்: அலக்கு-ஆ.. அப்டின்னா?!

: அலக்கு பாத்ததில்லையா.. நீண்ட கம்பு ஒன்றின் நுனியில் கொக்கி (அ) சிறிய கதிர் அரிவாள் மாதிரியான ஒரு உலோக ஆயுதம் இணைக்கப்பட்டிருக்கும்.. கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் பழங்கள் பறிக்க.. கிளைகளை வளைத்து கொடுக்க உபயோகப்படுத்தப்படுவது..
மாட்டி இழுக்கறதுன்னு வைச்சுக்கலாம்.. இப்போ அந்த உவமை புரியுதா..
சுண்டி இழுக்கும் கண்கள் அப்டீன்னு பொருள் படலாம் அந்த உவமை..

நா: அட, நம்ம கொக்கிக்கோல்.. புளி உலுக்குவாங்களே..!

: தெரியல-பா, அலக்கு தான் எங்க பக்கம் சொல்லுவாங்க.. எதுவா இருந்தா என்ன, உவமை தான இங்க பாக்கணும்.. ஆகா.. பிரிச்சிருக்காரு சினேகன்!

நா: அருமை, அருமை, தமிழ் அருமை, தமிழில் கவி அருமை, கவியில் சொல் அருமை!

: அமுதில் விளைந்த கவியல்லவா..

ஆக, இந்த வரிசை, முழுவரிசை மூலம் பாட்டு நெறைய கத்துக்கறனோ இல்லையோ, தமிழ் நல்லா கத்துக்கறேன்!!

ஃபோன் மாடி!

போன வாரம், ரயில்ல வந்தப்ப, நடந்த ஒரு நடப்பு.. நான் வண்டியில ஏறி உக்காந்ததும், எதிர்ல, ஒரு முதியவர, இளைஞன் ஒருத்தன் வந்து உக்கார வச்சு, வழியனுப்ப வந்திருந்தான்.. அவங்க ரெண்டு பேரும், ஆங்கிலமும் தென்னிந்திய மொழி ஒன்னும் [நெறைய ஆங்கிலத்துல, கொஞ்சம் அந்த மொழி] கலந்து பேசிக்கிட்டிருந்தாங்க..

நமக்கு ஒரு கெட்ட பழக்கம்.. கூட இருப்பவங்க, பாக்கறவங்க, மத்தவங்க, எல்லாரோட மொழிய ஊகிக்க பார்ப்பேன். குறிப்பா - ஆட்டோ ஓட்டுனர், வழிப்பயணிகள் - இப்படி.

இவங்க பேசினது இதுதான்-னு குறிப்பா சொல்ல முடியல, அப்பப்ப வார்த்தைகள் வாங்கி, செயல்படுத்திப் பாத்துக்கிட்டிருந்தேன்.. கண்டிப்பா தெலுங்கும், மலையாளமும் இல்ல-ங்கறது உறுதியாயிடுச்சு. தமிழா, கன்னடமா,னு தெரியல.. [தமிழுக்கும் கன்னடத்துக்கும் வேறுபாடு தெரியலயானு கேக்காதீங்க.. அவ்ளோ குறைவா மொழிச்சொற்கள் பேசினாங்க!]

வண்டி கெளம்பற நேரம் வந்துச்சு. ஆகா, தோத்துட்டமானு நெனைக்க, அந்த இளைஞன், விடைவாங்கினு கெளம்பிட்டான். முடிஞ்சது கதைனு பாக்கறதுக்குள்ள, 'ஃபோன் மாடி!' - நடைபாதையிலிருந்து இளைஞன் குரல். 'யுரேகா!' - கன்னடம் முடிவானது..!

இப்படித்தான்-ங்க, மாடி, ச்செய்யண்டி, பண்ணு, கரோ - இத வச்சே மொழிய ஊகிக்க வேண்டிய நிலமை வந்துடுச்சு.. எல்லாரும் ஆங்கிலம் கலக்காம, அவங்கவங்க மொழியில ஒழுங்கா பேச ஆரம்பிச்சுட்டா, நம்ம பாடு திண்டாட்டம் தான்! ;]

கடலோரக் கவிதைகள்

தண்ணீருக்கும் கவிதைக்கும் தொடர்பு இருக்குமோ??

அண்மையில, மெரீனா கடற்கரைக்கு நண்பரோட போயிருந்தேன். அங்க போய், கடல் அலையைப் பாத்துக்கிட்டு, வெட்டி அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தோம்.. அப்போ, நண்பர் அலையில கால் நனைக்கப் போனார். அவர் நின்ன இடத்துக்கு அப்ப வரைக்கும் வந்த அலை, அவர் போனதும் பின்வாங்க ஆரம்பிச்சுடுச்சி.. அவர் நெருங்கிப் போக, போக, அலை விலகிப் போய்கிட்டு இருந்துச்சு.. அப்போ தோணுச்சு..
கிட்டக் கிட்டப் போக,
ஒட்ட ஒட்ட வந்து,
எட்ட எட்ட அலை போகுது..
பாத்து..
கடல் உனக்கு வலை போடுது..


அதே நேரத்துல, பக்கத்துல ஒரு சிறுவன், குச்சி ஒன்னுத்த அலையில தூக்கிப் போட்டு விளையாடிக்கிட்டிருந்தான்.. ஆகா..
வீசி எறியும் குச்சியை
பாசத்துடன் எடுத்துவந்து
கொடுக்கும் - என்
செல்ல நாய்... கடல்.


நண்பர், என்னோட 'கவிதை'களை ரசிப்பவராம்! நான் எழுதறதலாம் கவிதைனு சொல்றதே பெருசு, அதுக்கு ரசிகர்தான் ரொம்ப குறைச்சல்! அப்படியே அரட்டை கவிதைங்க பக்கம் போச்சு..

நான்: இப்படி நல்ல சூழல், அமைப்பல்லாம் இருந்தாதான் கவிதை வருமோ!
நண்பர்: சூழலா.. அதுக்காக மாசாமாசம் பீச்-சுக்கு வா, கவிதை வரட்டும்..
நான்: பீச்-சுனு இல்ல, தண்ணீ இருக்கற இடங்களுக்கு போனாலோ, பாத்தாலோ, கவிதை வரும்னு நினைக்கிறேன்..
நண்பர்: தண்ணீ இருக்கற இடமா..!?!
நான்: அடப்பாவி, நான் சொன்னது, ஆறு, அணை, அருவி - போல நீர்நிலைகள் - Westminster Bridge - கவிதை சின்ன வயசுல படிச்சிருக்கமில்ல.. ஞாபகம் இருக்கா?
நண்பர்: ஆஆ.. முடியலயே..
நான்: ம்ம்ம்.. தண்ணீ அடிச்சா கூடதான் கவிதை வரும்.. நம்ம கண்ணதாசன் இல்ல..?
நண்பர்: க்கும்! தண்ணீ அடிச்சா வாந்தி தான் வரும்! :-)
நான்: அது, பொதுமக்கள் தண்ணீ அடிச்சா வாந்தி வரும்; கவிஞர்கள் தண்ணீ அடிச்சா கவிதை வரும்.. ;D
நண்பர்: ஆள விடு சாமி..

உண்மையிலயே, நீர்நிலைகளை பொருளா வச்சு பல கவிதைங்க இருக்குங்க - தற்காலத்துலயும், பழங்காலத்துலயும், தமிழ்-லயும், பிற மொழிகள்-லயும்..

புதுப்பிப்பு - நிகழ்நிலையும் இற்றையும்!

அண்மையில, ஒரு இடுகை-ல போட, 'Update:' ங்கறதுக்கு இணைச்சொல் தேவைப்பட்டது. சரி-னு சிந்திச்சு பாத்ததுல 'புதுப்பிப்பு' சரியா இருக்கும்னு நினைச்சு, அதையே இடுகையில போட்டும் விட்டேன். ஆனா மனசு சும்மா இருக்குமா? அப்படியே சுற்றத்துகிட்டயும், நட்புகிட்டயும், ஒரு கேள்வியத் தொடங்கி விட்டேன் - 'Update:' க்கு இணைச்சொல் என்ன-னு.
அடுத்தநாள் நண்பர் ஒருவர்-ட்ட இருந்து பதில் வந்துச்சு.

நண்பர்:
Update - நிகழ்நிலைப்படுத்துதல் அல்லது இற்றைப்படுத்துதல்
நான்:
பரவா இல்லை.. புதுப்பிப்பு - இதுவே நல்லா இருக்கு..
நண்பர்:
சரி.. சும்மா தகவலுக்காக சொன்னேன்..
நான்:
தகவல் நல்லாத் தான் இருக்கு.. நிகழ்-நிலைப்-படுத்துதல் சரி.. ஆமா.. இற்றைனா என்னா? அப்புறம், சொந்த தகவலா - இல்லைனா எங்க இருந்து புடிச்சீங்கனு சொல்லுங்க..
நண்பர்:
இற்றைன்னா என்னன்னு எனக்கும் தெரியல.. தெரியவந்தா சொல்றேன்.. பொருள் நன்றி : விக்சனரி
நான்:
இற்றை - இன்று. adv. To-day; இன்றைக்கு. பொருள் நன்றி - சென்னைப் பல்கலை - தமிழகராதி..
அதனால, இற்றைப்படுத்துதல் - இன்றுபடுத்துதல்
நண்பர்:
நன்று

அப்புறம் வீட்டுல இதப்பத்தி பேசிக்கிட்டிருந்தப்ப, எனக்கு வைரமுத்துவின் வரிகள்: "அற்றைத் திங்களந்நிலவில்" நினைவுக்கு வந்துச்சு..
அற்றை - அன்று
அதே போக்குல தேடிப்பாத்தா,
எற்றை - என்று

இதெல்லாம்விட, இன்னும் ஒரு அருமையான, வழக்கத்தில் இருக்கற சொல்-பொருள்:
ஒற்றை - ஒன்று!
அட, பிற்றை - பின்று [பின்பு]
மூற்றை - மூன்று

ஆராய்ந்து பாத்தா,
'ற்றை'- 'ற்று'+ஐ;
'ற்று' - றகரம்: இலக்கணவிதி ஏதாவதின்படி னகரம் ஆகி, 'ன்று' ஆகியிருக்கலாம்!

ஆகா, ஆகா, இதப்போல சொற்கள், இலக்கணம் வேறெங்கும் உண்டா?

'யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!' - பாரதி

பி.கு.: நாங்கலாம் தமிழெழுத தமிழ்99-க்கு மாறிட்டோம், நீங்க எப்ப மாறப் போறீங்க?

ஃபயர்பாக்ஸ்-2 உம் தமிழ் ஒருங்குறியும்!

வலைப்பதிவு எழுதத் தொடங்கியப்ப, எனக்கு இந்த பிரச்சனை இருந்துச்சு.. பதிவின் இடுகைகள் தலைப்பிலும் வேறசில இடங்களிலும், ஒற்று சார்ந்த சார்பெழுத்துகள் மெய்யும் ஒற்றும் தனித்தனியா, "தணிகா"-னு அடிச்சா "தண ிக ா"-னு வந்துச்சு.

என்னடா இது, இப்படி வருதே-னு பாத்தா, ஃபயர்பாக்ஸ்.2-ல தான் இதைப்போல வந்துச்சு! ஃபயர்பாக்ஸ்-3 பீட்டா-லயும், ஐ.ஈ-லயும், சரியாத்தான் இருந்துச்சு!

இதைப்பத்தி இணையத்துல பாத்ததிலும், சிலர்கிட்ட கேட்டதிலும், CSS-க்கும் ஃபயர்பாக்ஸ் தமிழ் ஒருங்குறிக்கும் நடுவுலதான் பிரச்சனைனு புரிஞ்சது. அதாவது, பதிவோட முன்வடிவுல(template) CSS-ல எங்கலாம் "letter-spacing" அல்லது "justify" வருதோ, அங்கலாம் சார்பெழுத்துகள் பிரிஞ்சு பிரிஞ்சு, தப்புத் தப்பா வருது..

அன்பர்ல பலர் இதை கவனிச்சிருக்க மாட்டீங்க. இதுக்கு தீர்வு என்னனா, பதிவோட வடிவமைப்புல "Edit HTML"-ல போய் "Expand Widget Templates"-ஐ இயக்கி, எந்த வரியில எல்லாம் "letter-spacing" அல்லது "justify" வருதோ, அங்கலாம் '//' போட்டு அதை 'குறிப்பா'(comment) ஆக்கிடணும்.

அப்படித்தான் என் பதிவுல பல இடங்களை படிக்கும்படியா ஆச்சு!

மத்தவங்க பதிவுகள்-ல இப்படி வந்தா "GreaseMonkey" ஃபயர்பாக்ஸ் நீட்சியை நிறுவி, MozTxtAlignFix Script பயன்படுத்தவும். - நன்றி ரவி-யின் இடுகை

பி.கு.: வெற்றி! இந்த இடுகை முழுசா தமிழ்99 விசை-ல அடிச்சேங்க!
[கத்துக்கறதுனால அடிக்கறதுக்கு எக்கச்சக்க நேரம் ஆச்சுங்கறது வேற ஒன்னு.. ஆனா கைவந்தப்புறம் வேகமா அடிக்கலாமில்ல!]

தமிழில் தட்டெழுதுங்கள்!

போன வெள்ளிக் கிழமை, நண்பர் ஒருத்தர்கிட்ட GTalk-ல பேசிட்டிருந்தப்போ, நான் ஒருங்குறி(unicode) தமிழ்-ல தட்டெழுதிட்டிருந்ததப் பார்த்து, செம மகிழ்ச்சி அவருக்கு.. எப்படி தமிழ்-ல தட்டெழுதறதுனு கேட்டாரு.. அவருக்கு அப்போவே சில சுட்டிகள் கொடுத்தேன்.. அப்புறந்தான் இதைப் பத்தி விரிவா ஒரு இடுகை எழுதனா என்ன-னு தோணுச்சு..

தமிழ்-ல தட்டெழுதறது எப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி, இரண்டு கலைச்சொற்களும், அவற்றோட பயன்பாடும் புரிஞ்சிக்கறது ரொம்ப உதவியா இருக்கும்:

1. விசைப்பலகை வடிவமைப்பு (Keyboard Layout)
நம்ம விசைப்பலகையில எழுத்துக்கள் எப்படி வரிசையிட்டிருக்காங்க-ங்கறது.
[நம்மில் பலர் ஆங்கில KeyBoard பார்க்கறப்ப, ஏன் இப்படி தாறுமாறா QWERTYUIOP - னு எழுத்தெல்லாம் வச்சிருக்காங்க, ABCDEFGHIJK - னு வச்சிருந்தா பார்த்து அடிக்க எவ்ளோ எளிதா இருக்கும்னு நினைச்சிருப்போம்.. அது போல, வகைவகையா தமிழ் வடிவமைப்புகள் இருக்கு.]
பழைய தட்டச்சு முறை, புதிய தட்டச்சு முறை, பாமினி, தமிழ்99, அஞ்சல், பேச்சுமுறை(Phonetic)-னு பல வடிவமைப்புகள் இருந்தாலும் [இதுல ஒரே வடிவமைப்புக்கு பல பேர்களும் இருக்கு!] இன்னைக்கு வலை அன்பர்கள் பெரும்பாலானோர் பேச்சுமுறை-யையே தட்டெழுத பயன்படுத்துறாங்க.
தமிழ் விசைப்பலகை வடிவமைப்புகள் ஒப்பீடு..
தமிழ்மொழி சார்ந்த நோக்கத்துல பார்க்கறப்போ தமிழ்99-ஏ சிறந்த வடிவமைப்பு என்பதால், முடிந்தவரை இதை பயன்படுத்தணும்னு தமிழறிஞர்கள் சொல்றாங்க.. நானும் முயற்சி செய்யுறேன்.. நீங்களும் செய்யுங்க.. :-)

2.குறியேற்றம் (Encoding)
நம்ம அடிக்கற எழுத்துகளை கணிணி எப்படி கையாளும்-ங்கறது.
[நாம தமிழ் எழுத - வட்டெழுத்துகளும், ஆங்கிலத்துல தமிழ் எழுதறதும், இது போல பல முறைகள் பயன்படுத்தறோம்; கணிணி தமிழ் எழுத என்ன பயன்படுத்தும்-ங்கற வழியில சிந்திச்சுப்பாருங்க..]
TAB, TAM, TSCII, TUNE, தினமணி, தினத்தந்தி-னு ஆளாளுக்கு ஒரு குறியேற்றம் வச்சிருந்தாலும், ஒருங்குறி(Unicode) தான் இன்னைக்கு பரவலா இருக்கு. அதில்லாம, அதிக இணையதளங்களும், மென் ஒருங்குகளும்(Applications) ஒருங்குறி தமிழ் தான் பயன்படுத்துது.. (நீங்க படிச்சிகிட்டிருக்க இந்த எழுத்துகள் ஒருங்குறியில எழுதப்பட்டவை.)

சரி, இது போதும்னு நினைக்கறேன். இப்போ, தமிழ்-ல தட்டெழுதறது எப்படினு பார்க்கலாம்.. தமிழ்-ல தட்டெழுதறது இரண்டு வகையில எழுதலாம் - இணையதளங்கள் மூலமா தட்டெழுதி, வெட்டி-ஒட்டுறது; அதுக்காக தனியா மென்பொருள் பயன்படுத்தி, நேரடியா தமிழ்-லயே எழுதறது;

வெட்டி-ஒட்டுற முறைதான் தொடக்க காலத்துல இருந்து அதிகமா பயன்படுத்தப்பட்டு வந்தது, ஆனா மென்பொருட்கள் தனியா வரத் தொடங்கியதும், வெட்டு-ஒட்டு தேவையில்லாததாலயும் எந்த மென்பொருள்-ல வேணும்னாலும் [GTalk, Messenger, Office, ..] பயன்படுத்தலாங்கறதுனாலயும், தட்டெழுத்து மென்பொருள்கள் பரவலாய்க்கிட்டு இருக்கு.. நீங்களும் அந்தமாதிரி மென்பொருள் பயன்படுத்தறதே சிறந்தது.

வெட்டி-ஒட்டு தட்டெழுத்து இணையதளங்கள்:
புதுவை தமிழ் எழுதி - நாங்க கல்லூரி படிக்கும்போது தட்டெழுத பயன்படுத்தனோம்..
கிள்பேட்
தகடூர்
தமிழ்99 முறையில் தட்டெழுத..
இதுல பேச்சுமுறைல அடிக்கறது ரொம்ப எளிதுங்க - vaNakkam -னு அடிச்சா, வணக்கம்-னு வரும்.. இதுல சில தளங்கள் மத்த வடிவமைப்புகள்-லயும் அடிக்க விடறாங்க..

தமிழ் எழுதி மென்பொருட்கள்:
எ-கலப்பை
கிழக்குப் பதிப்பகம் எழுதி

தமிழ்விசை Firefox Addon
அதியன் Firefox addon - குறியேற்றங்களை ஒருங்குறிக்கு மாற்ற..

மென்பொருட்களை பொருத்தறது, திறக்கறது, எழுதறதுனு, பொதுமக்கள் பயப்படுவாங்க-ன்னாலும், இதுங்கள பொருத்தறது ரொம்ப எளிதுங்க.. யார் வேணா செய்யலாம்.. முயற்சி செஞ்சு பாருங்க, முடியலனா என்னைக் கேளுங்க, நான் உதவறேன்..
தமிழ்99-உம் எ-கலப்பையும்

மேலும் விவரங்களுக்கு..
தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கம்

அணையில் பிடித்த அனை

நேத்து வரி-சைல போட்டிருந்த பாடல் பத்தி் சொந்தம் ஒருத்தர் ஒரு பிழை அனுப்புனாரு.. "அணைத்து நனைந்தது" - அணைத்து-க்கு இரண்டு சுழி 'ன' தான் வரும்னு..

அவர் சொன்ன கருத்து -
அணை : அணைக்கட்டு, நீர்த்தேக்கம்
அனை : கட்டிப்பிடித்தல், அவித்தல்

இதென்னடா இது, நாமளும் எவ்ளோ தமிழ் படிச்சிருக்கோம், எங்கயுமே "அனை" பார்த்ததில்லயே, சரி, பார்த்துட்டா போச்சுனு சென்னைப் பல்கலை தமிழகராதி-ல போய் பார்த்ததுல புதுச்சொல் ஒன்னோட பொருள் புரிந்ததது..

அனை¹ - அந்த, அனை² - மீன்வகை
அணை²-த்தல் - தழுவுதல், கட்டுதல், அவித்தல், கூட்டிமுடித்தல, உண்டாக்குதல்,
அணை³ - அணைக்கட்டு

[சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதியில் இருந்து..]
[ஆக்கப் பொது உரிமத்தின் கீழ்.. Under Creative Commons License]

அதனால அடுத்த தடவ மேட்டூர் போகும்போது,
அனை(அந்த) அணையில் அனை(மீன்) பிடித்து படகுல அணை(கட்டு)த்திடலாம்.. :-)

அவர் சுட்டிக்காட்டியது பிழையில்லனாலும், அவரால தமிழின் சொற்சுவைய அறிந்திருக்கோமில்ல!!

ஏ நானும் ரௌடி, நானும் ரௌடி..

வணக்கம்,

ரொம்ப நாளா பதிவெழுதணும்னு ஆசைங்க.. ஆனா தள்ளிப் போட்டுகிட்டே இருந்துட்டேன்..
கடைசியா ஆரம்பிச்சுட்டோம்ல..
என்னோட முதல் வலைப்பதிவுகள் பார்க்க..
தமிழ் திரை இசைப் பாடல்கள் தான் பொருள்..
'வரி'சை
முழு'வரி'சை

முழிச்சுட்டேன்.. இதா வரேன்..

நன்றி,
தணிகா