ஃபோன் மாடி!

போன வாரம், ரயில்ல வந்தப்ப, நடந்த ஒரு நடப்பு.. நான் வண்டியில ஏறி உக்காந்ததும், எதிர்ல, ஒரு முதியவர, இளைஞன் ஒருத்தன் வந்து உக்கார வச்சு, வழியனுப்ப வந்திருந்தான்.. அவங்க ரெண்டு பேரும், ஆங்கிலமும் தென்னிந்திய மொழி ஒன்னும் [நெறைய ஆங்கிலத்துல, கொஞ்சம் அந்த மொழி] கலந்து பேசிக்கிட்டிருந்தாங்க..

நமக்கு ஒரு கெட்ட பழக்கம்.. கூட இருப்பவங்க, பாக்கறவங்க, மத்தவங்க, எல்லாரோட மொழிய ஊகிக்க பார்ப்பேன். குறிப்பா - ஆட்டோ ஓட்டுனர், வழிப்பயணிகள் - இப்படி.

இவங்க பேசினது இதுதான்-னு குறிப்பா சொல்ல முடியல, அப்பப்ப வார்த்தைகள் வாங்கி, செயல்படுத்திப் பாத்துக்கிட்டிருந்தேன்.. கண்டிப்பா தெலுங்கும், மலையாளமும் இல்ல-ங்கறது உறுதியாயிடுச்சு. தமிழா, கன்னடமா,னு தெரியல.. [தமிழுக்கும் கன்னடத்துக்கும் வேறுபாடு தெரியலயானு கேக்காதீங்க.. அவ்ளோ குறைவா மொழிச்சொற்கள் பேசினாங்க!]

வண்டி கெளம்பற நேரம் வந்துச்சு. ஆகா, தோத்துட்டமானு நெனைக்க, அந்த இளைஞன், விடைவாங்கினு கெளம்பிட்டான். முடிஞ்சது கதைனு பாக்கறதுக்குள்ள, 'ஃபோன் மாடி!' - நடைபாதையிலிருந்து இளைஞன் குரல். 'யுரேகா!' - கன்னடம் முடிவானது..!

இப்படித்தான்-ங்க, மாடி, ச்செய்யண்டி, பண்ணு, கரோ - இத வச்சே மொழிய ஊகிக்க வேண்டிய நிலமை வந்துடுச்சு.. எல்லாரும் ஆங்கிலம் கலக்காம, அவங்கவங்க மொழியில ஒழுங்கா பேச ஆரம்பிச்சுட்டா, நம்ம பாடு திண்டாட்டம் தான்! ;]

கடலோரக் கவிதைகள்

தண்ணீருக்கும் கவிதைக்கும் தொடர்பு இருக்குமோ??

அண்மையில, மெரீனா கடற்கரைக்கு நண்பரோட போயிருந்தேன். அங்க போய், கடல் அலையைப் பாத்துக்கிட்டு, வெட்டி அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தோம்.. அப்போ, நண்பர் அலையில கால் நனைக்கப் போனார். அவர் நின்ன இடத்துக்கு அப்ப வரைக்கும் வந்த அலை, அவர் போனதும் பின்வாங்க ஆரம்பிச்சுடுச்சி.. அவர் நெருங்கிப் போக, போக, அலை விலகிப் போய்கிட்டு இருந்துச்சு.. அப்போ தோணுச்சு..
கிட்டக் கிட்டப் போக,
ஒட்ட ஒட்ட வந்து,
எட்ட எட்ட அலை போகுது..
பாத்து..
கடல் உனக்கு வலை போடுது..


அதே நேரத்துல, பக்கத்துல ஒரு சிறுவன், குச்சி ஒன்னுத்த அலையில தூக்கிப் போட்டு விளையாடிக்கிட்டிருந்தான்.. ஆகா..
வீசி எறியும் குச்சியை
பாசத்துடன் எடுத்துவந்து
கொடுக்கும் - என்
செல்ல நாய்... கடல்.


நண்பர், என்னோட 'கவிதை'களை ரசிப்பவராம்! நான் எழுதறதலாம் கவிதைனு சொல்றதே பெருசு, அதுக்கு ரசிகர்தான் ரொம்ப குறைச்சல்! அப்படியே அரட்டை கவிதைங்க பக்கம் போச்சு..

நான்: இப்படி நல்ல சூழல், அமைப்பல்லாம் இருந்தாதான் கவிதை வருமோ!
நண்பர்: சூழலா.. அதுக்காக மாசாமாசம் பீச்-சுக்கு வா, கவிதை வரட்டும்..
நான்: பீச்-சுனு இல்ல, தண்ணீ இருக்கற இடங்களுக்கு போனாலோ, பாத்தாலோ, கவிதை வரும்னு நினைக்கிறேன்..
நண்பர்: தண்ணீ இருக்கற இடமா..!?!
நான்: அடப்பாவி, நான் சொன்னது, ஆறு, அணை, அருவி - போல நீர்நிலைகள் - Westminster Bridge - கவிதை சின்ன வயசுல படிச்சிருக்கமில்ல.. ஞாபகம் இருக்கா?
நண்பர்: ஆஆ.. முடியலயே..
நான்: ம்ம்ம்.. தண்ணீ அடிச்சா கூடதான் கவிதை வரும்.. நம்ம கண்ணதாசன் இல்ல..?
நண்பர்: க்கும்! தண்ணீ அடிச்சா வாந்தி தான் வரும்! :-)
நான்: அது, பொதுமக்கள் தண்ணீ அடிச்சா வாந்தி வரும்; கவிஞர்கள் தண்ணீ அடிச்சா கவிதை வரும்.. ;D
நண்பர்: ஆள விடு சாமி..

உண்மையிலயே, நீர்நிலைகளை பொருளா வச்சு பல கவிதைங்க இருக்குங்க - தற்காலத்துலயும், பழங்காலத்துலயும், தமிழ்-லயும், பிற மொழிகள்-லயும்..