புதுப்பிப்பு - நிகழ்நிலையும் இற்றையும்!

அண்மையில, ஒரு இடுகை-ல போட, 'Update:' ங்கறதுக்கு இணைச்சொல் தேவைப்பட்டது. சரி-னு சிந்திச்சு பாத்ததுல 'புதுப்பிப்பு' சரியா இருக்கும்னு நினைச்சு, அதையே இடுகையில போட்டும் விட்டேன். ஆனா மனசு சும்மா இருக்குமா? அப்படியே சுற்றத்துகிட்டயும், நட்புகிட்டயும், ஒரு கேள்வியத் தொடங்கி விட்டேன் - 'Update:' க்கு இணைச்சொல் என்ன-னு.
அடுத்தநாள் நண்பர் ஒருவர்-ட்ட இருந்து பதில் வந்துச்சு.

நண்பர்:
Update - நிகழ்நிலைப்படுத்துதல் அல்லது இற்றைப்படுத்துதல்
நான்:
பரவா இல்லை.. புதுப்பிப்பு - இதுவே நல்லா இருக்கு..
நண்பர்:
சரி.. சும்மா தகவலுக்காக சொன்னேன்..
நான்:
தகவல் நல்லாத் தான் இருக்கு.. நிகழ்-நிலைப்-படுத்துதல் சரி.. ஆமா.. இற்றைனா என்னா? அப்புறம், சொந்த தகவலா - இல்லைனா எங்க இருந்து புடிச்சீங்கனு சொல்லுங்க..
நண்பர்:
இற்றைன்னா என்னன்னு எனக்கும் தெரியல.. தெரியவந்தா சொல்றேன்.. பொருள் நன்றி : விக்சனரி
நான்:
இற்றை - இன்று. adv. To-day; இன்றைக்கு. பொருள் நன்றி - சென்னைப் பல்கலை - தமிழகராதி..
அதனால, இற்றைப்படுத்துதல் - இன்றுபடுத்துதல்
நண்பர்:
நன்று

அப்புறம் வீட்டுல இதப்பத்தி பேசிக்கிட்டிருந்தப்ப, எனக்கு வைரமுத்துவின் வரிகள்: "அற்றைத் திங்களந்நிலவில்" நினைவுக்கு வந்துச்சு..
அற்றை - அன்று
அதே போக்குல தேடிப்பாத்தா,
எற்றை - என்று

இதெல்லாம்விட, இன்னும் ஒரு அருமையான, வழக்கத்தில் இருக்கற சொல்-பொருள்:
ஒற்றை - ஒன்று!
அட, பிற்றை - பின்று [பின்பு]
மூற்றை - மூன்று

ஆராய்ந்து பாத்தா,
'ற்றை'- 'ற்று'+ஐ;
'ற்று' - றகரம்: இலக்கணவிதி ஏதாவதின்படி னகரம் ஆகி, 'ன்று' ஆகியிருக்கலாம்!

ஆகா, ஆகா, இதப்போல சொற்கள், இலக்கணம் வேறெங்கும் உண்டா?

'யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!' - பாரதி

பி.கு.: நாங்கலாம் தமிழெழுத தமிழ்99-க்கு மாறிட்டோம், நீங்க எப்ப மாறப் போறீங்க?

ஃபயர்பாக்ஸ்-2 உம் தமிழ் ஒருங்குறியும்!

வலைப்பதிவு எழுதத் தொடங்கியப்ப, எனக்கு இந்த பிரச்சனை இருந்துச்சு.. பதிவின் இடுகைகள் தலைப்பிலும் வேறசில இடங்களிலும், ஒற்று சார்ந்த சார்பெழுத்துகள் மெய்யும் ஒற்றும் தனித்தனியா, "தணிகா"-னு அடிச்சா "தண ிக ா"-னு வந்துச்சு.

என்னடா இது, இப்படி வருதே-னு பாத்தா, ஃபயர்பாக்ஸ்.2-ல தான் இதைப்போல வந்துச்சு! ஃபயர்பாக்ஸ்-3 பீட்டா-லயும், ஐ.ஈ-லயும், சரியாத்தான் இருந்துச்சு!

இதைப்பத்தி இணையத்துல பாத்ததிலும், சிலர்கிட்ட கேட்டதிலும், CSS-க்கும் ஃபயர்பாக்ஸ் தமிழ் ஒருங்குறிக்கும் நடுவுலதான் பிரச்சனைனு புரிஞ்சது. அதாவது, பதிவோட முன்வடிவுல(template) CSS-ல எங்கலாம் "letter-spacing" அல்லது "justify" வருதோ, அங்கலாம் சார்பெழுத்துகள் பிரிஞ்சு பிரிஞ்சு, தப்புத் தப்பா வருது..

அன்பர்ல பலர் இதை கவனிச்சிருக்க மாட்டீங்க. இதுக்கு தீர்வு என்னனா, பதிவோட வடிவமைப்புல "Edit HTML"-ல போய் "Expand Widget Templates"-ஐ இயக்கி, எந்த வரியில எல்லாம் "letter-spacing" அல்லது "justify" வருதோ, அங்கலாம் '//' போட்டு அதை 'குறிப்பா'(comment) ஆக்கிடணும்.

அப்படித்தான் என் பதிவுல பல இடங்களை படிக்கும்படியா ஆச்சு!

மத்தவங்க பதிவுகள்-ல இப்படி வந்தா "GreaseMonkey" ஃபயர்பாக்ஸ் நீட்சியை நிறுவி, MozTxtAlignFix Script பயன்படுத்தவும். - நன்றி ரவி-யின் இடுகை

பி.கு.: வெற்றி! இந்த இடுகை முழுசா தமிழ்99 விசை-ல அடிச்சேங்க!
[கத்துக்கறதுனால அடிக்கறதுக்கு எக்கச்சக்க நேரம் ஆச்சுங்கறது வேற ஒன்னு.. ஆனா கைவந்தப்புறம் வேகமா அடிக்கலாமில்ல!]

தமிழில் தட்டெழுதுங்கள்!

போன வெள்ளிக் கிழமை, நண்பர் ஒருத்தர்கிட்ட GTalk-ல பேசிட்டிருந்தப்போ, நான் ஒருங்குறி(unicode) தமிழ்-ல தட்டெழுதிட்டிருந்ததப் பார்த்து, செம மகிழ்ச்சி அவருக்கு.. எப்படி தமிழ்-ல தட்டெழுதறதுனு கேட்டாரு.. அவருக்கு அப்போவே சில சுட்டிகள் கொடுத்தேன்.. அப்புறந்தான் இதைப் பத்தி விரிவா ஒரு இடுகை எழுதனா என்ன-னு தோணுச்சு..

தமிழ்-ல தட்டெழுதறது எப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி, இரண்டு கலைச்சொற்களும், அவற்றோட பயன்பாடும் புரிஞ்சிக்கறது ரொம்ப உதவியா இருக்கும்:

1. விசைப்பலகை வடிவமைப்பு (Keyboard Layout)
நம்ம விசைப்பலகையில எழுத்துக்கள் எப்படி வரிசையிட்டிருக்காங்க-ங்கறது.
[நம்மில் பலர் ஆங்கில KeyBoard பார்க்கறப்ப, ஏன் இப்படி தாறுமாறா QWERTYUIOP - னு எழுத்தெல்லாம் வச்சிருக்காங்க, ABCDEFGHIJK - னு வச்சிருந்தா பார்த்து அடிக்க எவ்ளோ எளிதா இருக்கும்னு நினைச்சிருப்போம்.. அது போல, வகைவகையா தமிழ் வடிவமைப்புகள் இருக்கு.]
பழைய தட்டச்சு முறை, புதிய தட்டச்சு முறை, பாமினி, தமிழ்99, அஞ்சல், பேச்சுமுறை(Phonetic)-னு பல வடிவமைப்புகள் இருந்தாலும் [இதுல ஒரே வடிவமைப்புக்கு பல பேர்களும் இருக்கு!] இன்னைக்கு வலை அன்பர்கள் பெரும்பாலானோர் பேச்சுமுறை-யையே தட்டெழுத பயன்படுத்துறாங்க.
தமிழ் விசைப்பலகை வடிவமைப்புகள் ஒப்பீடு..
தமிழ்மொழி சார்ந்த நோக்கத்துல பார்க்கறப்போ தமிழ்99-ஏ சிறந்த வடிவமைப்பு என்பதால், முடிந்தவரை இதை பயன்படுத்தணும்னு தமிழறிஞர்கள் சொல்றாங்க.. நானும் முயற்சி செய்யுறேன்.. நீங்களும் செய்யுங்க.. :-)

2.குறியேற்றம் (Encoding)
நம்ம அடிக்கற எழுத்துகளை கணிணி எப்படி கையாளும்-ங்கறது.
[நாம தமிழ் எழுத - வட்டெழுத்துகளும், ஆங்கிலத்துல தமிழ் எழுதறதும், இது போல பல முறைகள் பயன்படுத்தறோம்; கணிணி தமிழ் எழுத என்ன பயன்படுத்தும்-ங்கற வழியில சிந்திச்சுப்பாருங்க..]
TAB, TAM, TSCII, TUNE, தினமணி, தினத்தந்தி-னு ஆளாளுக்கு ஒரு குறியேற்றம் வச்சிருந்தாலும், ஒருங்குறி(Unicode) தான் இன்னைக்கு பரவலா இருக்கு. அதில்லாம, அதிக இணையதளங்களும், மென் ஒருங்குகளும்(Applications) ஒருங்குறி தமிழ் தான் பயன்படுத்துது.. (நீங்க படிச்சிகிட்டிருக்க இந்த எழுத்துகள் ஒருங்குறியில எழுதப்பட்டவை.)

சரி, இது போதும்னு நினைக்கறேன். இப்போ, தமிழ்-ல தட்டெழுதறது எப்படினு பார்க்கலாம்.. தமிழ்-ல தட்டெழுதறது இரண்டு வகையில எழுதலாம் - இணையதளங்கள் மூலமா தட்டெழுதி, வெட்டி-ஒட்டுறது; அதுக்காக தனியா மென்பொருள் பயன்படுத்தி, நேரடியா தமிழ்-லயே எழுதறது;

வெட்டி-ஒட்டுற முறைதான் தொடக்க காலத்துல இருந்து அதிகமா பயன்படுத்தப்பட்டு வந்தது, ஆனா மென்பொருட்கள் தனியா வரத் தொடங்கியதும், வெட்டு-ஒட்டு தேவையில்லாததாலயும் எந்த மென்பொருள்-ல வேணும்னாலும் [GTalk, Messenger, Office, ..] பயன்படுத்தலாங்கறதுனாலயும், தட்டெழுத்து மென்பொருள்கள் பரவலாய்க்கிட்டு இருக்கு.. நீங்களும் அந்தமாதிரி மென்பொருள் பயன்படுத்தறதே சிறந்தது.

வெட்டி-ஒட்டு தட்டெழுத்து இணையதளங்கள்:
புதுவை தமிழ் எழுதி - நாங்க கல்லூரி படிக்கும்போது தட்டெழுத பயன்படுத்தனோம்..
கிள்பேட்
தகடூர்
தமிழ்99 முறையில் தட்டெழுத..
இதுல பேச்சுமுறைல அடிக்கறது ரொம்ப எளிதுங்க - vaNakkam -னு அடிச்சா, வணக்கம்-னு வரும்.. இதுல சில தளங்கள் மத்த வடிவமைப்புகள்-லயும் அடிக்க விடறாங்க..

தமிழ் எழுதி மென்பொருட்கள்:
எ-கலப்பை
கிழக்குப் பதிப்பகம் எழுதி

தமிழ்விசை Firefox Addon
அதியன் Firefox addon - குறியேற்றங்களை ஒருங்குறிக்கு மாற்ற..

மென்பொருட்களை பொருத்தறது, திறக்கறது, எழுதறதுனு, பொதுமக்கள் பயப்படுவாங்க-ன்னாலும், இதுங்கள பொருத்தறது ரொம்ப எளிதுங்க.. யார் வேணா செய்யலாம்.. முயற்சி செஞ்சு பாருங்க, முடியலனா என்னைக் கேளுங்க, நான் உதவறேன்..
தமிழ்99-உம் எ-கலப்பையும்

மேலும் விவரங்களுக்கு..
தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கம்

அணையில் பிடித்த அனை

நேத்து வரி-சைல போட்டிருந்த பாடல் பத்தி் சொந்தம் ஒருத்தர் ஒரு பிழை அனுப்புனாரு.. "அணைத்து நனைந்தது" - அணைத்து-க்கு இரண்டு சுழி 'ன' தான் வரும்னு..

அவர் சொன்ன கருத்து -
அணை : அணைக்கட்டு, நீர்த்தேக்கம்
அனை : கட்டிப்பிடித்தல், அவித்தல்

இதென்னடா இது, நாமளும் எவ்ளோ தமிழ் படிச்சிருக்கோம், எங்கயுமே "அனை" பார்த்ததில்லயே, சரி, பார்த்துட்டா போச்சுனு சென்னைப் பல்கலை தமிழகராதி-ல போய் பார்த்ததுல புதுச்சொல் ஒன்னோட பொருள் புரிந்ததது..

அனை¹ - அந்த, அனை² - மீன்வகை
அணை²-த்தல் - தழுவுதல், கட்டுதல், அவித்தல், கூட்டிமுடித்தல, உண்டாக்குதல்,
அணை³ - அணைக்கட்டு

[சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதியில் இருந்து..]
[ஆக்கப் பொது உரிமத்தின் கீழ்.. Under Creative Commons License]

அதனால அடுத்த தடவ மேட்டூர் போகும்போது,
அனை(அந்த) அணையில் அனை(மீன்) பிடித்து படகுல அணை(கட்டு)த்திடலாம்.. :-)

அவர் சுட்டிக்காட்டியது பிழையில்லனாலும், அவரால தமிழின் சொற்சுவைய அறிந்திருக்கோமில்ல!!

ஏ நானும் ரௌடி, நானும் ரௌடி..

வணக்கம்,

ரொம்ப நாளா பதிவெழுதணும்னு ஆசைங்க.. ஆனா தள்ளிப் போட்டுகிட்டே இருந்துட்டேன்..
கடைசியா ஆரம்பிச்சுட்டோம்ல..
என்னோட முதல் வலைப்பதிவுகள் பார்க்க..
தமிழ் திரை இசைப் பாடல்கள் தான் பொருள்..
'வரி'சை
முழு'வரி'சை

முழிச்சுட்டேன்.. இதா வரேன்..

நன்றி,
தணிகா